Saturday, October 8, 2011

நிலை மாறுமா?

கடந்த சில வாரங்களுக்கும் முன்னால், நாகப்பட்டிணம் மாவட்டம், வெள்ளப்பள்ளம் எனும் கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்   சென்று இன்னமும் கரை சேரவில்லை என்கிற செய்தி கேட்டு அதிர்ச்சியடைகின்றேன். அதைவிட கொடுமை, மற்ற மீனவ கிராம மக்களிடம் விசாரிக்கும் போது, இதைப் பற்றி அவர்கள் ஒரு பொருட்டாய் நினைப்பதாகத் தெரியவில்லை. ஏன் இந்த கேவலமான அவலம்? உயிர் என்பது, அதிலும் மீனவன் உயிர் என்பது அவ்வளவு கேவலமா? இந்த 3 பேர்களின் குடும்பத்தினரின் எதிர்காலம் என்னவாகும்? இந்த 3 பேர்களுள் ஒருவரின் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அந்த பெண்ணின் எதிர்காலம் என்னவாகும்? இதற்காக கவலைப்படுவோர் எத்தனை பேர்? 

இதே நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தமிழக  அரசில் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். அவர் செய்த முயற்சிதான் என்ன? அல்லது, இரவுபகலாக கடற்பரப்பை காவல் செய்வதாக காட்டிக்கொள்ளும் கப்பற்படை செய்த முயற்சிகள் என்ன? 

ஆனால், ஒன்று மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். மீனவன் ஒன்றுபடாத வரையில் இம்மாதிரி சம்பவங்கள் இனி ஏராளமாய் நடக்கும். நமக்குத் தான் நியாயம் கேட்க ஆளில்லையே. அதோடில்லாமல், நம்மவர்களுக்குத்தான் எத்துணை முக்கியமான வேலைகள்? அரசியல் கட்சிகளுக்கு கொடிகள் பிடிப்பது, மறைந்த தலைவர் என்றாலும் மறக்காமல் ஓட்டுகள் போடுவது, பக்கத்து ஊர்க்காரனை கூட பகைவனாகப் பார்ப்பது என எத்தனை முக்கியமான வேலைகள். 

இப்படியான நிகழ்வுகளைப் பார்க்கும் போது, என் இனம் அழிவின் பாதையில் பயணிக்கிறதா?என்று நினைக்கத் தோன்றுகிறது.  இன்று தாயாய், தகப்பனாய், தாத்தா பாட்டியாய் உள்ளோரெல்லாம், நாளைய சமுதாயத்திற்கு மிச்சம் வைத்துவிட்டு போகப்போவது என்ன? அடிமைகள் என்ற பட்டமா?