Sunday, May 15, 2011

வாழ்த்துவோம்!

நடந்து முடிந்த தமிழக  சட்டசபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களை வாழ்த்தும் நெஞ்சங்களுள் நாமும் ஒருவராக இருப்போம். எத்தனையோ அரசுகள் தமிழகத்தில் அமைந்தும் , ஒன்றுபடாத மீனவர் சமுதாயம் சாதித்தது என்னவோ, ஒன்றுமேயில்லை. என் அருமை மீனவ சமுதாயமே, உங்களின் குறைந்தபட்ச ஒற்றுமைக்கும், வாழ்வாதாரத்திற்கும் அதிர்வேட்டு வைக்கும் நிகழ்வுகள் தமிழக கடற்கரை முழுதும் மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளின் வடிவில் உருவெடுத்துள்ளன என்பது நீவிர் அறியாததா? பறந்து கிடந்த கடலுக்குள்ளே, சுதந்திரமாய் சுற்றித் திரிந்து, இறைவன் கொடுத்த வளத்தை வாழ்வாகக் கொண்ட உங்களை எல்லைகளைச்  சொல்லி மத்திய அரசு முடக்கும் முயற்சிகள் ஒரு பக்கம். கருப்பு பணத்தையும், வெளுப்பு பணத்தையும் கொட்டி உங்கள் வாழுமிடங்களை காலிச் செய்ய நடக்கும் முயற்சிகள் ஒரு புறம். சொந்த நாட்டுக்குள்ளே, அகதிகளாய் வாழத் தயார் ஆகிவிட்டீர்கள், அப்படித்தானே? 

செய்யும் தொழிலை தெய்வமாய் மதிக்க வேண்டும் என்பார்கள். என் சமுதாயம் மதித்து வாழ்கிறதா? அப்படிஎன்றால், வெளிநாட்டு வருமானம் பெரிதென்று கருதி நிறைய இளைஞர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றனர். நாகரிகத்தின் வளர்ச்சி என்று சொல்லி பல  குடும்பங்கள் மேற்கில் குடியேறிவிட்டனர். கல்வி,வேலைவாய்ப்பு என்று சொல்லி பலர் வெளியேறிவிட்டனர். ஆனால், மீன் பிடித்து வாழும் என் ஏழை மீனவர்களின் எதிர்காலம், கேள்விக்குறிதானா? 

மீனவனின் வாழ்வில் பஞ்சாயத்து என்பது ஒரு மிகப் பெரிய அங்கம். ஆனால், எத்தனை மீனவ பஞ்சாயத்து புள்ளிகள் யோக்கியமானவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவரவர் மனசாட்சியைக் கேட்டு அவர்களே தெரிந்துகொள்ளவேண்டும். காரணம், பிச்சைக் காசுகளுக்காக தங்களை நம்பும் சமுதாயத்தை காட்டிக்கொடுத்து வாழும் அவலத்தை நிறைய பேர் அரங்கேற்றம் செய்கிறார்கள் என்பதால் தான் இதைச் சொல்ல வேண்டிய நிலை. ஒற்றுமை என்கிறபோது, நம் மீனவ இனத்தின் கட்டுக்கோப்புத்தான் அதிகம் பேசப்படும். ஆனால், தன் பிள்ளைகள் படிக்க வேண்டும், தன் பிள்ளைகள் மட்டும் நல்வாழ்வை அனுபவிக்க வேண்டும், தன் குடும்பம் மட்டும் சுகமாய் வாழவேண்டும் என்பதில் அதிக அக்கறையுடன் வாழும் பட்சத்தில், தங்களின் வாழ்க்கை வரலாற்றில் அதிக கறைகள் படிகின்றன என்பதை மறந்துவிடக்கூடாது. 

இம்மாதிரி எட்டப்பர்களுக்கு காத்திருக்கிறது கடவுள் தரப்போகும் மரணதண்டனை. எத்தனையோ அரசியல்வாதிகள், அதிகாரம் படைத்தோர், கோடிசுவரர்கள் எல்லாம் தர்மத்தைக் கைவிட்டதனால் எமதர்மனின் கால்களில் விழுந்தார்கள் என்பதையெல்லாம் யாரும் அறியாதது அல்ல. அவர்களின் குடும்பங்கள் சின்னாபின்னப் பட்டதெல்லாம் வரலாறு நமக்கு சொல்லும் பாடமாக இருக்கின்றது. எனவே, நியாயம் எதுவோ அதன் வழியில் வாழப்பாருங்கள். ஒற்றுமையாய் வாழ்ந்து உங்களின் சுதந்திரத்தையும், வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்கி சொந்த நாட்டில் அகதிகளாய் வாழ ஆசைப்படாதீர்கள்.  

No comments:

Post a Comment