Wednesday, January 12, 2011

அறிமுகம்!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இந்த வாசகத்தை எவராலும் மறக்க இயலுமோ? நக்கீரர்  உதிர்த்த வாசகங்கள். எதிரே நிற்பவன் இறைவனேயானாலும் தவறு,  தவறுதான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிய தமிழ்ப்புலவர். பாண்டிய மன்னனின் அரசவைப் புலவர். சங்கறுக்கும் எங்கள் குலம், சங்கரனாருக்கு ஏது குலம் என்று இறைவனை வஞ்ச புகழ்ச்சி அணியால் பாடிய சொல்வேந்தர். அவர்தம் இனம் என்று சொல்லிக்கொள்ளும் ஓர் இனம் தான் மீனவர் இனம். நீண்ட நாட்களாக மீனவ இனத்தின் வளர்ச்சிக்காக என்னால் இயன்றமட்டும் பாடுபடவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். குடும்பச்  சூழல் காரணமாக ஆசைகள் அடங்கிப்போகும். இன்று எனது எண்ணத்தின் ஆசையை வெளிக்கொணரும் விதமாக இந்த வலை இதழை (blog) தொடங்குகின்றேன். 

இந்த வலை இதழ் வாயிலாக மீனவ சமுதாயத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை, மீனவ மாணவ/மாணவியரின் எதிர்காலம் குறித்த ஆலோசனைகள், இன்றைய மீனவ சமுதாயம், நாட்டின் வளர்ச்சியில் மீனவ மக்களின் பங்கு, அரசியலில் மீனவ மக்களின் பங்கு, மீனவ மக்களின் வாழ்வியல் சூழ்நிலைகள், திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை, உரிமைகள் எவை ஆகியனவற்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

வாழ்க தமிழினம்! வளர்க மீனவம்!

No comments:

Post a Comment