Wednesday, January 12, 2011

என்ன கொடுமை!

இன்று (12.01.2011), புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் சார்ந்த விசைப்படகு தொழிலாளி 25 வயது பாண்டியன் எனும் மீனவர் இலங்கை இராணுவத்தின் அத்துமீறிய செயலின் காரணமாக மார்பில் குண்டு பாய்ந்து மரணமடைந்தார் என்ற செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உண்மையில் மிகக் கொடுமை. என்னதான் நம்மூர் அரசியல்வாதிகள்,  பொய்த்துப்  போன உறுதிமொழிகள் சொல்லி வந்தாலும், இலங்கை ராணுவம் தனது திமிர்த்தனமான கொடுஞ்செயல்களை நிறுத்திக் கொள்வதில்லை. இதைவிட வேடிக்கை என்னவெனில், நமது இந்திய இராணுவத்தின் கப்பற்படை என்ன செய்துகொண்டிருகிறது  என்று தெரியவில்லை. தமிழ் மீனவ மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்னும் எத்தனை  உயிர்கள் பறிக்கப்பட உள்ளன என்று தெரியவில்லை. உலகில் முதல் பத்து இடங்களுக்குள் இராணுவ பலம் கொண்டு விளங்கும் ஒரு பெரிய நாட்டின் குடிமக்களை ஒரு சிறிய தீவைச்  சேர்ந்த ஒரு குட்டி இராணுவம் பலமுறை உயிர் பலி வாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். பல மதங்கள், பல ஜாதிகள் கொண்ட ஒரு பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிகொண்டிருக்கும் இந்த நாட்டில் மீனவனாய் பிறந்த ஒரே காரணத்திற்காக, நியாயமாகக் கிடைக்கக் கூடிய எவ்வித பாதுகாப்பும் இல்லையே! 

அரசியல்வாதிகளுக்கு ஒட்டு தேவையெனில் மீனவன் என்ற இனம் ஒன்று இருப்பது நினைவுக்கு வரும். தேர்தல் முடிந்துவிட்டால், அனைத்தும்  மறந்துபோகும். விதவைகள்  அதிகம்  இருக்கும்  ஒரு இனம் என்றால், அது நிச்சயம் மீனவ இனம் தான். ஒ! என்  மீனவ  இனமே! நீ விழித்துக் கொள்வது எப்போது? உன் நாட்டில் உனக்கு பாதுகாப்பே கிடையாதா? உனக்கென்று இருக்கும்  உரிமைகள் தெரியவில்லையா? இந்தியாவில், தமிழகத்தில், ஒவ்வொரு இனமும் தனது உரிமைகளை பெற்றுக்கொண்டிருக்கிறது, மீனவம் தவிர. ஏன் இந்த நிலை? சென்னையில் இருக்கும் மீனவன் நினைக்கிறான், இறந்தவன் நம் ஊர்  கிடையாதே என்று. பக்கத்து ஊர் என்றாலும், நீ பாகிஸ்தானாக அல்லவா நினைக்கிறாய்! இன ஒற்றுமை எப்போது உன்னுள் முளைக்கும்? உன்னையே காப்பாற்றிக்கொள்ள   முடியவில்லையே , எப்படி  உன் குடும்பத்தைக்  காக்க  போகிறாய்? 

எத்தனை முறை எத்தனையோ பேர் இறந்தாலும், நீ உண்மை உணர்வது எப்போது? இறந்து போன  எம்ஜிஆர் -க்கெல்லாம் ஓட்டுகள் போட்டு நீ எடுத்துக்கொண்டது என்னவோ? உன் இளைய சமுதாயம் முடங்கிக் கிடப்பது சினிமா என்பது உனக்கு தெரியாதோ? சென்னையைத் தாண்டி பிழைக்கச் சென்றால் அண்டை மாநிலத்தான், ஆந்திராக்காரன் உதைக்கிறான். உனக்கு உரிமையுள்ள எல்லைக்குள்ளே பிழைத்தாலும் எவன் எவனோ சுடுகிறான். உனக்கென்று நாதிகள் இல்லையா?  

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி என்று சொன்னார்கள். அதிலும், திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்கின்றபோது நீயல்லவா ஆதி திராவிடனாக இருக்க வேண்டும்? தமிழன் என்கிற ஒரு இனத்தை தரணி முழுதும் காட்டி வந்த நீ உன் எல்லையிலேயே பலி கொடுக்கப்படவா உன் தாய் உன்னை மடி சுமந்தாள்? 

நாடு சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்கள் கழிந்தும், என் இனமே! உண்மையான சுதந்திரம் உனக்கு எப்போது?

No comments:

Post a Comment