Friday, January 28, 2011

ஒற்றுமை எனும் வலிமையான ஆயுதம் ...

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, இல்லையேல் அனைவர்க்கும் தாழ்வு", என்ற வாசகம் மீனவ மக்களுக்கு மிகவும் பொருந்தும். இன்றளவும் கூட பக்கத்து மீனவ கிராமங்களை பக்கத்து தேசமாகவே பார்க்கும் மனோ நிலை உள்ளது. இரண்டு ஊர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒருவருக்கொருவர் பெண் கொடுத்திருப்பர், பங்காளிகளாக கூட இருப்பர். ஆனால், வெட்டுக்குத்து என்று காவல்நிலையங்களில் காத்துக்கிடக்கும் கேவலம் இன்று இல்லை என்று மறுக்க முடியுமா? என் இள வயதுகளில் நான் பார்த்ததுண்டு. எனக்கும் 34 வயது ஆகிறது. ஆனாலும், நிலை மாறவில்லை. அவ்வளவு ஏன்? ஒருவர் மற்ற கிராமத்தில் பிறந்து, இன்னொரு கிராமத்தில் வாழும் காலத்தில் மீனவர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி சமுதாயத்திற்கு ஏதேனும் நன்மை செய்யலாம் என்கிறபோது இந்த நபர் வாழும் கிராமத்தைச் சேர்ந்தவர்களோ, "நீ  இந்த ஊரைச் சார்ந்த்தவனில்லாத நிலையில், நீ இங்கே அமைப்பு உருவாக்கக் கூடாது, நீ இங்கு வாழக்கூடாது", என்றெல்லாம் பேசும் நிலையில் நமக்கென்று ஒரு தலைவன் வருவது எப்போது? 

இந்த நாட்டைப் பொறுத்தமட்டில், மற்ற வளங்களைக் காட்டிலும், இந்த தேசத்திற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்  தருகின்ற தொழிலாக மீன் பிடித் தொழில் உள்ளது. மற்ற இனத்தவரைக் காட்டிலும், மீனவர்கள் பெரும்பான்மையாக வெளிநாடுகளில் தொழிலாளர்களாகப் பணிபுகின்றனர். குறிப்பாக, சிங்கப்பூரின் பிரபலமான  கப்பல் கட்டும் தளங்களில் பணிபுரிகின்றனர். ஆக, தொழில் ரீதியாக, இந்த நாட்டிற்கு மீனவர் மூலம் வரும் அந்நிய செலாவணி வேண்டும், ஆனால், மீனவ சமுதாயத்தைத் திரும்பிப் பார்க்க அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை. மனமுமில்லை. 

மீனவர் பகுதி சார்ந்த நகரங்கள் என்று  எடுத்துக்கொண்டால், இந்த தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை முதன்மைப் பெறுகிறது. பொதுவாக, நகரங்கள், அங்கே பெரும்பான்மையில் வாழும் இனத்தவரே சலுகைகள் அதிகம் பெறும் நிலை உள்ளது, உதாரணமாக, தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள். ஆனால், சென்னையில் அப்படி இல்லையே. காரணம், மீனவ மக்களின் கல்வி அறிவு. பொதுவாக, பள்ளி, கல்லூரி படிப்பெல்லாம் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டுதானே. வேலைவாய்ப்பு என்றால், பணம் சம்பாதிக்கத்தானே? மீன்பிடித் தொழிலுக்குச் சென்றால், பணம் நிறைய கிடைக்கிறதே, பின் எதற்குப் படிக்கவேண்டும்? என்பது போன்ற ஒரு மனோநிலை மீனவ மக்களிடையே பல காலங்களாக நிலவுகிறது. இந்நிலைதான், இவர்களை ஆட்சி, அதிகாரங்களைப் பெற இயலாத நிலைக்கு தள்ளிவிட்டது. அதனால் தான், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளை சரிவர உணர முடியாமல், இன்றோ, இந்த தேசத்தின் பூர்வ குடிகளாக இருந்தும், உரிமைகளைப் பெற முடியாமல், சிங்கள வெறியர்களின் குண்டுகளுக்குப் பலியாகும், கேவலம் ஏற்பட்டுவிட்டது. இந்த தேசத்தின் கடற்கரைப் பாதுகாப்பை ஏற்றிருக்கும் கப்பற்படையில், எத்தனை மீனவ இனம் சார்ந்த நபர்கள் பணியில் உள்ளனர். அல்லது, தொண்டு நிறுவனங்கள் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும், நிறுவனங்கள், எத்தனை மீனவ இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன?

(தொடரும்..)

No comments:

Post a Comment