Monday, January 31, 2011

தெரிந்துகொள்ளுங்கள் ! Know What is What!

  • எந்த வகை இரத்தம் தேவையென்றாலும், ஆயிரக்கணக்கான இரத்த தானம் செய்ய விரும்புவோரின் தொடர்புகளுக்கு, இணையத்தில் பாருங்கள். 

       www.friendstosupport.org 




  • இஞ்சினியரிங் மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியுவில் பங்கேற்க விரும்பினால், இந்த இணையத்தற்கு சென்று பார்க்கவும். நாற்பது நிறுவனங்களின் கேம்பஸ் இன்டர்வியுவில் பங்கேற்கலாம். 
             www.campuscouncil.com


  • உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி மற்று ஹாஸ்டல் வசதி பெற்றிட அணுகுங்கள்.
           9842062501,  9894067506

(தொடரும்)

Saturday, January 29, 2011

கல்வி உதவித் தொகை பெற... (Scholarship Available)

இந்தியா முழுமைக்கும் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை கிடைத்திட வழி வகுக்கும் நோக்கில் ஒரு இணையத்தளம் செயல்படுகிறது. உதவித்தொகை தேவைப்படுவோர், இந்த தளத்தில் தங்களின் இ-மெயில் முகவரியைக் கொடுத்து பதிவு செய்துகொள்வதன் மூலம், இந்தியா முழுவதும் உள்ள அறக்கட்டளைகளின் பார்வைக்கு இம்மாணவர்களின் விபரங்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. கல்வி உதவித்தொகை மட்டுமின்றி, வேலைவாய்ப்பு வேண்டுவோரும் பதிவு செய்துகொள்ளலாம். 

சென்று பாருங்கள்:

இந்த  இணையதளம் கல்வி உதவித்தொகை / வேலைவாய்ப்பு வேண்டுவோருக்கும் அறக்கட்டளைகளுக்கும் ஒரு இணைப்புப் பாலமாக விளங்குகின்றனர். இந்த தளத்தில், உங்களின் போட்டோ, பயோ-டேட்டா ஆகியவற்றை இணைத்துக் கொள்ளலாம்.  

Friday, January 28, 2011

ஒற்றுமை எனும் வலிமையான ஆயுதம் ...

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, இல்லையேல் அனைவர்க்கும் தாழ்வு", என்ற வாசகம் மீனவ மக்களுக்கு மிகவும் பொருந்தும். இன்றளவும் கூட பக்கத்து மீனவ கிராமங்களை பக்கத்து தேசமாகவே பார்க்கும் மனோ நிலை உள்ளது. இரண்டு ஊர்களை கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒருவருக்கொருவர் பெண் கொடுத்திருப்பர், பங்காளிகளாக கூட இருப்பர். ஆனால், வெட்டுக்குத்து என்று காவல்நிலையங்களில் காத்துக்கிடக்கும் கேவலம் இன்று இல்லை என்று மறுக்க முடியுமா? என் இள வயதுகளில் நான் பார்த்ததுண்டு. எனக்கும் 34 வயது ஆகிறது. ஆனாலும், நிலை மாறவில்லை. அவ்வளவு ஏன்? ஒருவர் மற்ற கிராமத்தில் பிறந்து, இன்னொரு கிராமத்தில் வாழும் காலத்தில் மீனவர்களுக்காக ஒரு அமைப்பை உருவாக்கி சமுதாயத்திற்கு ஏதேனும் நன்மை செய்யலாம் என்கிறபோது இந்த நபர் வாழும் கிராமத்தைச் சேர்ந்தவர்களோ, "நீ  இந்த ஊரைச் சார்ந்த்தவனில்லாத நிலையில், நீ இங்கே அமைப்பு உருவாக்கக் கூடாது, நீ இங்கு வாழக்கூடாது", என்றெல்லாம் பேசும் நிலையில் நமக்கென்று ஒரு தலைவன் வருவது எப்போது? 

இந்த நாட்டைப் பொறுத்தமட்டில், மற்ற வளங்களைக் காட்டிலும், இந்த தேசத்திற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்  தருகின்ற தொழிலாக மீன் பிடித் தொழில் உள்ளது. மற்ற இனத்தவரைக் காட்டிலும், மீனவர்கள் பெரும்பான்மையாக வெளிநாடுகளில் தொழிலாளர்களாகப் பணிபுகின்றனர். குறிப்பாக, சிங்கப்பூரின் பிரபலமான  கப்பல் கட்டும் தளங்களில் பணிபுரிகின்றனர். ஆக, தொழில் ரீதியாக, இந்த நாட்டிற்கு மீனவர் மூலம் வரும் அந்நிய செலாவணி வேண்டும், ஆனால், மீனவ சமுதாயத்தைத் திரும்பிப் பார்க்க அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை. மனமுமில்லை. 

மீனவர் பகுதி சார்ந்த நகரங்கள் என்று  எடுத்துக்கொண்டால், இந்த தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை முதன்மைப் பெறுகிறது. பொதுவாக, நகரங்கள், அங்கே பெரும்பான்மையில் வாழும் இனத்தவரே சலுகைகள் அதிகம் பெறும் நிலை உள்ளது, உதாரணமாக, தொழில் நிறுவனங்கள், வேலைவாய்ப்புகள். ஆனால், சென்னையில் அப்படி இல்லையே. காரணம், மீனவ மக்களின் கல்வி அறிவு. பொதுவாக, பள்ளி, கல்லூரி படிப்பெல்லாம் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டுதானே. வேலைவாய்ப்பு என்றால், பணம் சம்பாதிக்கத்தானே? மீன்பிடித் தொழிலுக்குச் சென்றால், பணம் நிறைய கிடைக்கிறதே, பின் எதற்குப் படிக்கவேண்டும்? என்பது போன்ற ஒரு மனோநிலை மீனவ மக்களிடையே பல காலங்களாக நிலவுகிறது. இந்நிலைதான், இவர்களை ஆட்சி, அதிகாரங்களைப் பெற இயலாத நிலைக்கு தள்ளிவிட்டது. அதனால் தான், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளை சரிவர உணர முடியாமல், இன்றோ, இந்த தேசத்தின் பூர்வ குடிகளாக இருந்தும், உரிமைகளைப் பெற முடியாமல், சிங்கள வெறியர்களின் குண்டுகளுக்குப் பலியாகும், கேவலம் ஏற்பட்டுவிட்டது. இந்த தேசத்தின் கடற்கரைப் பாதுகாப்பை ஏற்றிருக்கும் கப்பற்படையில், எத்தனை மீனவ இனம் சார்ந்த நபர்கள் பணியில் உள்ளனர். அல்லது, தொண்டு நிறுவனங்கள் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளும், நிறுவனங்கள், எத்தனை மீனவ இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கின்றன?

(தொடரும்..)

Wednesday, January 12, 2011

என்ன கொடுமை!

இன்று (12.01.2011), புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் சார்ந்த விசைப்படகு தொழிலாளி 25 வயது பாண்டியன் எனும் மீனவர் இலங்கை இராணுவத்தின் அத்துமீறிய செயலின் காரணமாக மார்பில் குண்டு பாய்ந்து மரணமடைந்தார் என்ற செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உண்மையில் மிகக் கொடுமை. என்னதான் நம்மூர் அரசியல்வாதிகள்,  பொய்த்துப்  போன உறுதிமொழிகள் சொல்லி வந்தாலும், இலங்கை ராணுவம் தனது திமிர்த்தனமான கொடுஞ்செயல்களை நிறுத்திக் கொள்வதில்லை. இதைவிட வேடிக்கை என்னவெனில், நமது இந்திய இராணுவத்தின் கப்பற்படை என்ன செய்துகொண்டிருகிறது  என்று தெரியவில்லை. தமிழ் மீனவ மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்னும் எத்தனை  உயிர்கள் பறிக்கப்பட உள்ளன என்று தெரியவில்லை. உலகில் முதல் பத்து இடங்களுக்குள் இராணுவ பலம் கொண்டு விளங்கும் ஒரு பெரிய நாட்டின் குடிமக்களை ஒரு சிறிய தீவைச்  சேர்ந்த ஒரு குட்டி இராணுவம் பலமுறை உயிர் பலி வாங்கிக் கொண்டு இருக்கின்றார்கள். பல மதங்கள், பல ஜாதிகள் கொண்ட ஒரு பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லிகொண்டிருக்கும் இந்த நாட்டில் மீனவனாய் பிறந்த ஒரே காரணத்திற்காக, நியாயமாகக் கிடைக்கக் கூடிய எவ்வித பாதுகாப்பும் இல்லையே! 

அரசியல்வாதிகளுக்கு ஒட்டு தேவையெனில் மீனவன் என்ற இனம் ஒன்று இருப்பது நினைவுக்கு வரும். தேர்தல் முடிந்துவிட்டால், அனைத்தும்  மறந்துபோகும். விதவைகள்  அதிகம்  இருக்கும்  ஒரு இனம் என்றால், அது நிச்சயம் மீனவ இனம் தான். ஒ! என்  மீனவ  இனமே! நீ விழித்துக் கொள்வது எப்போது? உன் நாட்டில் உனக்கு பாதுகாப்பே கிடையாதா? உனக்கென்று இருக்கும்  உரிமைகள் தெரியவில்லையா? இந்தியாவில், தமிழகத்தில், ஒவ்வொரு இனமும் தனது உரிமைகளை பெற்றுக்கொண்டிருக்கிறது, மீனவம் தவிர. ஏன் இந்த நிலை? சென்னையில் இருக்கும் மீனவன் நினைக்கிறான், இறந்தவன் நம் ஊர்  கிடையாதே என்று. பக்கத்து ஊர் என்றாலும், நீ பாகிஸ்தானாக அல்லவா நினைக்கிறாய்! இன ஒற்றுமை எப்போது உன்னுள் முளைக்கும்? உன்னையே காப்பாற்றிக்கொள்ள   முடியவில்லையே , எப்படி  உன் குடும்பத்தைக்  காக்க  போகிறாய்? 

எத்தனை முறை எத்தனையோ பேர் இறந்தாலும், நீ உண்மை உணர்வது எப்போது? இறந்து போன  எம்ஜிஆர் -க்கெல்லாம் ஓட்டுகள் போட்டு நீ எடுத்துக்கொண்டது என்னவோ? உன் இளைய சமுதாயம் முடங்கிக் கிடப்பது சினிமா என்பது உனக்கு தெரியாதோ? சென்னையைத் தாண்டி பிழைக்கச் சென்றால் அண்டை மாநிலத்தான், ஆந்திராக்காரன் உதைக்கிறான். உனக்கு உரிமையுள்ள எல்லைக்குள்ளே பிழைத்தாலும் எவன் எவனோ சுடுகிறான். உனக்கென்று நாதிகள் இல்லையா?  

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடி என்று சொன்னார்கள். அதிலும், திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்கின்றபோது நீயல்லவா ஆதி திராவிடனாக இருக்க வேண்டும்? தமிழன் என்கிற ஒரு இனத்தை தரணி முழுதும் காட்டி வந்த நீ உன் எல்லையிலேயே பலி கொடுக்கப்படவா உன் தாய் உன்னை மடி சுமந்தாள்? 

நாடு சுதந்திரம் பெற்று இத்தனை வருடங்கள் கழிந்தும், என் இனமே! உண்மையான சுதந்திரம் உனக்கு எப்போது?

அறிமுகம்!

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இந்த வாசகத்தை எவராலும் மறக்க இயலுமோ? நக்கீரர்  உதிர்த்த வாசகங்கள். எதிரே நிற்பவன் இறைவனேயானாலும் தவறு,  தவறுதான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிய தமிழ்ப்புலவர். பாண்டிய மன்னனின் அரசவைப் புலவர். சங்கறுக்கும் எங்கள் குலம், சங்கரனாருக்கு ஏது குலம் என்று இறைவனை வஞ்ச புகழ்ச்சி அணியால் பாடிய சொல்வேந்தர். அவர்தம் இனம் என்று சொல்லிக்கொள்ளும் ஓர் இனம் தான் மீனவர் இனம். நீண்ட நாட்களாக மீனவ இனத்தின் வளர்ச்சிக்காக என்னால் இயன்றமட்டும் பாடுபடவேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். குடும்பச்  சூழல் காரணமாக ஆசைகள் அடங்கிப்போகும். இன்று எனது எண்ணத்தின் ஆசையை வெளிக்கொணரும் விதமாக இந்த வலை இதழை (blog) தொடங்குகின்றேன். 

இந்த வலை இதழ் வாயிலாக மீனவ சமுதாயத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை, மீனவ மாணவ/மாணவியரின் எதிர்காலம் குறித்த ஆலோசனைகள், இன்றைய மீனவ சமுதாயம், நாட்டின் வளர்ச்சியில் மீனவ மக்களின் பங்கு, அரசியலில் மீனவ மக்களின் பங்கு, மீனவ மக்களின் வாழ்வியல் சூழ்நிலைகள், திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவை, உரிமைகள் எவை ஆகியனவற்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

வாழ்க தமிழினம்! வளர்க மீனவம்!